அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாட்டில் அட்டனில் போராட்டம்.

0
132

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று 06.03.2022 அன்று அட்டன் நகரில் இடம்பெற்றது.

நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருவதைச் சுட்டிக் காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் அட்டன் நகரில் 06.03.2022 அன்று மதியம் 3 மணியளவில் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஸ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டதோடு, இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, தொடர் மின் விநியோக துண்டிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடு இவற்றின் காரணமாக மலையக மக்களும் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்தனர்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here