திருமண தோஷத்தை கழிக்க இளைஞர் ஒருவர் ஆட்டுக்கு தாலி கட்டி வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.திருமணங்கள் ஆயிரம் காலத்துப் பயிர் என வர்ணிக்கப்படுகின்றன. திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போகும் இளைஞர்களையும், யுவதிகளையும் கோயில்களுக்கு பெற்றோர் அழைத்துச்செல்வது பல ஆண்டுகளாக தொடரும் நிகழ்வாகும். தமிழகத்தில் இதற்கென பிரத்யேக கோயில்களும் உள்ளன. மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி, ஆந்திராவின் காளஹஸ்தி கோயில்களிலும் கூட்டம் குறைந்தபாடில்லை.
திருமண நடைமுறையில்தான் எத்தனை எத்தனை தடைக்கற்கள் என புலம்பும் 90-ஸ் கிட்ஸ்களின், ஒரு சிலருக்கு, முக்கிய தடையாக இருப்பது மாங்கல்ய தோஷமே. இதை போக்க வாழை மரங்களுக்கு தாலி கட்டும் நடைமுறையும் பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அதை வெட்டி தோஷத்தை நிவர்த்தி செய்வதும் வழக்கமாக உள்ளது. வட மாநிலங்களிலும் குறிப்பிட்ட சில மரங்களுக்கு தாலி கட்டும் வழக்கத்தை பல பகுதிகளில் காணமுடியும்..
இந்த நிலையில்தான் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள நூஜிவீடு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு ஜாதகத்தில் கோளாறு இருப்பதாக கணித்துக் கூறப்பட்டது. பெண் தேடும் படலத்தின் ஒரு பகுதியாக ரமேஷின் பெற்றோரும் பல இடங்களில் மணப்பெணை தேடி அலைந்தனர். இந்த சூழலில் ரமேஷின் ஜாதகத்தில் இரண்டு தாரம் உள்ளதாக ஜோசியர் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தாருக்கு .அதை நிவர்த்தி செய்ய உபாயமும் கூறினார். முதலில் ஆட்டுக்கு தாலி கட்டினால் தோஷம் கழிந்துவிடும் என ஆலோசனை வழங்கினார்.
இதையடுத்து தெலுங்கு புத்தாண்டு தினமான சனிக்கிழமை அங்குள்ள நவகிரக கோயிலில் ரமேஷுக்கும் பெண் ஆட்டுக்கும் திருமணம் நடந்தேறியது.
இந்த திருமணத்தில் பெண் வீட்டார் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை என்பதே குறை. எனினும் மாப்பிள்ளை வீட்டார் புடைசூழ வேத மந்திரங்களை பூசாரி ஓத தோஷத்தை கழிக்க திருமணம் நடந்தது.
இந்தோனேசியாவில் குக்கரை, பதிவு திருமணம் செய்து கொண்ட Khoirul Anam என்ற இளைஞர், சில நாட்களில் அதனை விவாகரத்து செய்தது கடந்தாண்டு பேசு பொருளானது. இந்நிலையில் ஒரு ஆட்டை இளைஞர் மணமுடித்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.