இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப தயார் நிலையில் இந்தியா..!!

0
144

வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கு அத்தியவசிய உணவு பொருட்களை அனுப்பி வைக்க தமிழக அரசாங்கம் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை நேற்று தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசும் போதே தமிழக முதல்வர் இதனை கூறியுள்ளார்.

அயல் நாடான இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், அங்குள்ள தமிழர்களுக்கு உதவிகளை வழங்க தமிழக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு,கிழக்கு, கொழும்பு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழர்களின் நலன்களுக்காக தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் அரிசி, தானியங்கள், மருந்து போன்றவற்றை அனுப்பி வைக்க தமிழக அரசாங்கம் தயாராக இருப்பதாக மு.க.ஸ்டாலின், இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனுப்பி வைக்கும் பொருட்களை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகங்கள் ஊடாக விநியோகிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக கடந்த 31 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். அத்துடன் இலங்கை கைப்பற்றியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here