மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற பொருளாதார பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாத இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்து அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப் பொதுச் செயலாளர் பி.கல்யாணகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
இன்றைய அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தின் காரணமாக நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணுமாறும் அரசாங்கத்தை பதவியிலிருந்து விலகுமாறும் கோரி இன்று நாடு முழுவதும் நாளுக்கு நாள் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இதனை கண்டுகொள்ளாத இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களின் போராட்டங்களைக் கொச்சைப் படுத்தி வருகின்றது.
இராஜாங்க பதவியைத் துறந்து பாராளுமன்றத்தில் தன்னிச்சையாக செயற்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறிக் கொள்கின்ற போதும்
இதுவரை அமைச்சுப் பொறுப்புகளை ஒப்படைக்கவும் இல்லை. அத்துடன் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதை மக்கள் நன்கு அறிவர்.
இன்று தோட்டத் தொழிலாளர்கள் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
கோதுமை மா நிவாரணம் தோட்டத் தொழிலாளருக்கு பெற்றுத்தருவோம் என்று கூறியவர்கள் இன்று அவ்வாறான எந்த நிவாரணத்தையும் மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்படவில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
இன்று அரசாங்கத்துக்கு எதிராகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு எதிராகவும் மலையக மக்கள் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.”என்றார்