அரசாங்கத்துக்கு எதிரான மலையகத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி

0
136
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழைப்பை ஏற்று இன்று மலையகம் முழுவதும் தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை  வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
ஜனாதிபதியையும் பிரதமரையும் உடனடியாக பதவி விலக கோரி இன்று நாடு முழுவதும் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தோட்டத் தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டுமென்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான திகாம்பரம் ,
இராதாகிருஷ்ணன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த வேண்டுகோளை ஏற்ற மலையக தோட்டத் தொழிலாளர்கள் இன்று முழுமையான வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.அதே வேளை  இந்த அடையாள வேலை நிறுத்தத்தை குழப்புவதற்கு சிலர் முயற்சி செய்த போதும் அது வெற்றி பெறவில்லை.
இன்று நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தையும் பிரதம மந்திரியையும் ஜனாதிபதியையும் பதவி விலக வேண்டும் என்று கோரியே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று இடம்பெற்ற ஹர்த்தாலுக்கு முழு மலையகமும் ஒத்துழைப்பு வழங்கியமையானது அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here