தொழில் உரிமைகள் மறுக்கப்பட்டு கெடுபிடிகளின் உச்சத்தில் மலையக மக்களின் மே தினம்

0
151

தொழில் உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்பட்டு, நிர்வாகத்தின் கெடுபிடிகள் உச்சம் தொட்டுள்ள சூழ்நிலையிலேயே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இம்முறை மே தினத்தை எதிர்கொள்கின்றனர்.

ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்கு தொழிற்சங்க தரப்புகளில் இருந்து தமக்கு உரிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதால் அதிருப்தியில் இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மே தின நிகழ்வுகள் தொடர்பில் இம்முறை அக்கறை காட்டாமல் இருப்பதை காணமுடிகின்றது.

” மே முதலாம் திகதி என்பது தொழிலாளர்களுக்கான தினமாகும். அந்நாளையும் நம் நாட்டு அரசியல் வாதிகள், அரசியல் மயப்படுத்திவிட்டனர். அதனால் எமக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. இம்முறை வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு, எமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளோம்.” என தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச தொழிலாளர் தினம் நாளை (01.05.2022) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இலங்கையிலும் கூட்டங்களும், பேரணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலையகத்திலும் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. எனினும், மே தினம் குறித்து மக்கள் இம்முறை அதிருப்தி நிலையிலேயே உள்ளனர். தற்போதைய அரசியலை மக்கள் வெறுப்பதே இதற்கு பிரதான காரணமாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாட் சம்பளம் உரிய வகையில் வழங்கப்படுவதில்லை, வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன, நிர்வாகத்தின் கெடுபிடிகளும் அதிகரித்துள்ளன. இவற்றுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. உரிமைகள் மறுக்கப்படும் நிலையில், எப்படி மே தினம் பற்றி சந்திப்பது என்பதே தொழிலாளர்களின் கேள்வியாக உள்ளது.

 

(க.கிஷாந்தன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here