தென் அதிவேக நெடுஞ்சாலையின் பெந்திகம மாற்றத்தில் வைத்து பொலிஸ் அதிகாரியொருவரை ஆபாச வார்த்தைகளால் வசை பாடிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரொருவரின் மகன் குறித்து பெலியத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (01) இடம்பெற்ற சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் வீடியோ பகிரப்பட்டிருந்தது.
வாகனத்தில் குளிர்சாதனப்பெட்டியை கவனக்குறைவாக ஏற்றியமையாலேயே அதிவேக நெடுஞ்சாலை நுழைவில் கடமையாற்றிய பொலிஸார் குறித்த வாகனத்தை, பெந்திகம இடமாற்றத்தில் வைத்து பொலிஸார் நிறுத்தியுள்ளனர்.
ஏற்றப்பட்ட குளிர்சாதன பெட்டியுடன் பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்பதால், அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய வேண்டாம் என்று பொலிஸ் அதிகாரி குறித்த சாரதியை அறிவுறுத்தினார்.
ஆனால் சாரதி ஆசனத்தில் இருந்த ஒருவரும் வாகனத்தில் இருந்த பெண் பயணியும் ஒருவரும் பொலிஸாாரை ஆபாச வார்த்தைகளால் திட்டத் தொடங்கினர்.
பின்னர், வாகன சாரதி தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தனது வாகனத்தை வேகமாக பின்னோக்கிச் சென்று சம்பவ இடத்தில் இருந்து வெளியேறியதையடுத்தே குறித்த பொலிஸ் அதிகாரி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான திலீப் வெதஆராச்சியின் மகன் என்றும் குறித்த பெண் அவரின் மனைவி என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை முதலில் தாக்க முற்பட்டதாக திலீப் வெதஆராச்சி எம்.பியின் மகன் ரவிந்து வெதஆராச்சி, சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் வீடியோவைப் பகிர்ந்துள்ள அவர், பொலிஸார் தன்னைக் கையாண்ட விதத்துக்கு பின்னரே வார்த்தைகளால் பதிலடி கொடுத்ததாகக் கூறினார்.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.