வங்கிகளில் உள்ள பணத்தை அரசாங்கம் எடுத்துவிடுமா?

0
175

வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்பட்டுள்ள பணத்தை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசாங்கம் எடுத்து விடும் என தெரிவிக்கப்படுவதில் உண்மை தன்மை இல்லை என இலங்கை வங்கியின் வடபிராந்திய உதவி பொது முகாமையாளர் வ.சிவானந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கியின் யாழ்.பேருந்து நிலைய கிளை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவில் இருந்தாலும், அதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு மக்களுடைய நம்பிக்கை, எங்களுடைய பங்களிப்பு எல்லாவற்றையும் சேர்த்து இந்த நாட்டினை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

அதற்கு வங்கி கட்டமைப்பு என்பது பொருளாதார கட்டமைப்பில் இன்றியமையாத ஒன்றாகும்.

வங்கி கட்டமைப்பு என்பது இல்லாவிட்டால் நாட்டினுடைய பொருளாதாரத்தினை சமன் செய்ய முடியாது.

தற்போது மக்கள் பலருடைய எண்ணங்கள் வங்கிகளில் உள்ள காசுகளை அரசாங்கம் எடுத்துவிடக் கூடும் என்று பலவிதமாக யோசிக்கிறார்கள். நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் எம்மிடம் கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள்.

உண்மையாகவே அது பொய்யான விடயமாகும். வங்கி கட்டமைப்பை சீராக பாதுகாக்க வேண்டியதும் தொடர்ந்தும் செயற்பாட்டில் வைத்திருக்க வேண்டியதும் வாடிக்கையாளர்கள் பொதுமக்களின் பங்களிப்பு தான் மிக முக்கியமானது.

ஆகவே வங்கி கட்டமைப்பு பற்றி நீங்கள் தவறான வதந்திகளை ஏற்படுத்த வேண்டாம். இப்போது சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை நாள் தோறும் பரப்பி வருகிறார்கள். அதனால் சாதாரண மக்கள் அதனை பார்த்து குழம்பி விடுகின்றனர்.

நாங்கள் ஒரு அரசாங்க வங்கி. உங்களுடைய பணத்திற்கான பாதுகாப்புகள் 100 வீதம் 200 வீதம் இருக்கும். வங்கி கட்டமைப்புடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியில் விடிவு இல்லை.

அவ்வாறு பொதுமக்கள் வங்கி கட்டமைப்பில் இருந்து விலகிச் செல்வதாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here