பெட்டி படுக்கைகளுடன் காத்திருந்து மண்ணெண்ணெய் கிடைக்காததால் மண்ணெண்ணை கோரி வீதிக்கு வந்த அட்டன் பிரதேச மக்கள்.

0
295

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள மல்லிகைப்பூ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையம் ஒன்றில் நேற்று இரவு முதல் மண்ணெண்ணெய் எதிர்பார்த்து பெட்டி படுக்கைகளுடன் காத்திருந்த மக்கள் இன்று 25 ம் திகதி காலை சுமார் 8.30 மணி அளவில் மண்ணெண்ணெய் வராது என தெரிவித்ததன் காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் ஹட்டன் கொழும்பு, ஹட்டன் நுவரெலியா ,ஹட்டன் கண்டி உள்ளிட்ட பிரதான வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டன. குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக பயணங்களை மேற்கொண்ட பொதுமக்கள் சிரமங்களுக்கு உள்ளாகினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே இருந்து ‘வேண்டும் வேண்டும் மண்ணெண்ணெய் வேண்டும்’ ‘கோட்டா வெளியேறு’ போன்ற கோஷங்களை எழுப்பி கரகோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த எண்ணை நிரப்பு நிலையத்திற்கு கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்ற போதிலும் அதில் ஒரு சிலருக்கு மாத்திரமே மண்ணெண்ணெய் கிடைக்கப்பெற்றன. பெரும்பாலானவர்களுக்கு மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பிரதேசத்திலுள்ள மக்கள் சமைப்பதற்காக மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள காத்திருந்தனர் எனினும் மண்ணெண்ணெய் வராது என தெரிந்து கொண்டதை அடுத்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய நிலையில் நேற்றைய தினம் பிரதேசத்திலுள்ள நலன்புரி சங்கங்கள் ஊடாக மண்ணெண்ணெய் பெறுவதற்கு படிவம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. நேற்று இரவு முதல் வரிசையில் நின்று அவர்களுக்கு மின்சாரப் பட்டியலை பரீட்சித்துப் பார்த்து முறையே இலக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் போலிசாரால் எட்டு முப்பது மணி அளவில் மண்ணெண்ணெய் வராது என்று தெரிவித்த உடன் ஆத்திரமடைந்த மக்கள் வீதியினை மறைத்து போராட்டத்தில் குதித்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இரவு பகலாக சிறிய பிள்ளைகளின் கைக்குழந்தைகளையும் வைத்துக்கொண்டு மண்ணெண்ணெய்க்காக காத்திருக்கிறோம். நேற்றைய தினம் எங்களுக்கு முன்னுரிமை படிவங்களும் வழங்கப்பட்டன. அதிகாலை வேளையில் விளக்கங்களும் போடப்பட்டன. இப்போது மண்ணெண்ணெய் இல்லை என்கிறார்கள் நாங்கள் என்ன செய்வது வேலைவெட்டி இன்றி மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக நாள்கணக்கில் காத்திருக்கிறோம.;

ஆனால் இதற்கு சரியான தீர்வினை எவரும் பெற்று கொடுப்பதில்லை எங்களிடம் ஓட்டு வாங்கிய மலையக தலைவர்கள் இன்று மக்கள் படும் அவலங்களை கண்டுகொள்வதில்லை ஒன்றுமே செய்ய முடியாவிட்டாலும் கூட மண்ணெண்ணெய் வினியோகிக்கப்படும் நாட்களாவுது தெரிந்து அறிவித்தாள் மக்கள் இந்த அளவு துன்பப்பட மாட்டார்கள். வாக்குகளை பெறும் போது மாத்திரம் உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாங்கள் பாராளுமன்றம் செல்கிறோம். உங்கள் உரிமைகள் சலுகைகள் அனைத்தையும் நியாயமான முறையில் பெற்றுக்கொடுப்போம.; என்று தெரிவிக்கின்றார்கள். ஆனால் அவை வெறும் வாய் வார்த்தைகளாக மாத்திரமே உள்ளன.

இப்போது மக்கள் படும் துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள் அவர்களின் கண்களுக்கு புலப்படவில்லையா? என பலரும் கேள்வி எழுப்புகின்றாரகள்.; இதேவேளை மற்றும் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நாட்டு மக்கள் இன்று அரிசிக்காக் சதொச நிலையங்களிலும் மண்ணெண்ணெய் காக எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கேஸ் பெற்றுக்கொள்வதற்கான முகவர் நிலையங்கள் முன்பும் நாட்கணக்கில் காத்திருக்கின்றனர். இது இந்த நாட்டு ஜனாதிபதிக்கு தெரியவில்லையா? மக்கள் பிரச்சினை தீர்க்க முடியாவிட்டால் தயவுசெய்து வெளியேறுங்கள.; ராஜபக்ச குடும்பத்தினர்தான் இன்று மக்கள் இந்த அளவு துன்பப்படுகின்றனர் அவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் முடியாவிட்டால் ஆட்சிப் பொறுப்பை எவரிடமாவது கையளிக்க வேண்டும் என வசைபாடினர்.

மக்கள் எதிர்ப்பினை தொடர்ந்து மீண்டும் மண்ணெண்ணை வழங்கப்போவதாக தெரிவித்து மக்களை மீண்டும் வரிசையில் நிற்குமாறு போலிசார் வலியுறுத்தினர் அதனைத் தொடர்ந்து போக்குவரத்து வழமைக்கு திரும்பினர்.
இதேவேளை கடந்த இரண்டு 3 நாட்களுக்கு முன் ஹட்டன் பகுதியில் உள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் குறித்த எண்ணெய் நிரப்பு நிலையத்தில் கொள்கலன் ஒன்றில் பெட்ரோல் பெற்றுச் சென்றுள்ளார் என்ற வீடியோ சமூக தளங்களில் உலா வருவதும் குறிப்பிடத்தக்கது

கொள்கலன்களில் எண்ணை வழங்க மாட்டோம் வரிசையில் வரும் வாகனங்களுக்கு மாத்திரமே பெற்றோர் பெற்றுக்கொடுப்போம் என்று தெரிவித்திருக்கும் நிலையில் அட்டன் பொலிஸார் மற்றும் இராணுவ பாதுகாப்பு பிரிவினர் இருக்கும்போது இவ்வாறு முறையற்ற முறையில் பெட்ரோல் எடுத்துச்செல்வது எவ்வாறு என பலர் அதில் பதிவிட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here