கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

0
201

கல்வி மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்களினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர மேலதிகமாக எதனையும் அறிவிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க அறிவித்துள்ளார்.

சிறுவர் மற்றும் ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்தோ அல்லது பெற்றோரிடமிருந்தோ பணம் அறவிடக் கூடாது என அறிவி்க்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் முறையற்ற முறையில் பணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் 2015/5 ஆம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை வலியுறுத்திய கல்விச் செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான நிதி சிக்கல்களுக்கு மத்தியில் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் திண்டாடுவதால் இதுபோன்ற பணச் செலவுகளை நிறுத்துவது அதிபர்களின் பொறுப்பு என அவர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களிடம் இருந்து தேவையின்றி பாடசாலை ஒன்று பணம் கேட்கும் பட்சத்தில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு என செயலாளர் வலியுறுத்தினார்.

ஹட்டன் கொட்டக்கல போகஹவத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் தின நிகழ்வு நடத்தியதற்காக 300 ரூபாவை செலுத்தாத காரணத்தினால் குறித்த பாடசாலை மாணவியை அதிபர் துடைப்பத்தால் அடித்த சம்பவம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் கல்வி மாவட்டம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தத்தின் கீழ் பாடசாலைக் கட்டணத்தைக் கூடக் கோரக்கூடாது எனவும், பெற்றோர்கள் பணத்தை செலுத்த முடியாத நிலையில் கிராம சேவகர் சான்றிதழை சமர்ப்பித்து அதனைச் செலுத்தாமல் இருக்க முடியும் எனவும் கல்விச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here