ஜனவரி மாதத்திற்குள் எமது நாடு கடுமையான முட்டை தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் இதன் காரணமாக ஜனவரி மாதத்திற்கு பிறகு முட்டை விலை மேலும் உயரலாம் என்றும் இலங்கை கால்நடை மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் சுசந்த மல்லவாராச்சி தெரிவித்துள்ளார்.கண்டியில் நடைபெற்ற இலங்கை கால்நடை மருத்துவ சங்கத்தின் வருடாந்த விஞ்ஞான அமர்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முட்டை பெறும் கோழிகளுக்கு தாய் விலங்குகள் இல்லாததே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம்.
வருடாந்தம் குறைந்தபட்சம் 80,000 தாய் விலங்குகள் தேவைப்பட்டாலும் இம்முறை கிட்டத்தட்ட பத்தாயிரம் தாய் விலங்குகளை மட்டுமே இறக்குமதி செய்ய முடிந்தது அதற்கு முக்கிய காரணம் நமது நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியாகும்.நிதிப் பிரச்சினை காரணமாக கால்நடை துறைக்கு அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை. அதனால் தாய் விலங்குகளின் இறக்குமதி மிகவும் குறைந்துள்ளது. இது நிச்சயமாக எதிர்காலத்தில் ஒரு கடுமையான பிரச்சினையாக இருக்கும்.
இப்போது தேவையான தாய் விலங்குகளை கொண்டு வந்தாலும் அவை முட்டையிட்டு குஞ்சுகளை வளர்க்கும் போது எங்களுக்கு முட்டை கிடைக்க குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். இது குறித்து இதுவரை முறையான திட்டங்கள் அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படவில்லை.இந்நிலையில் ஜனவரி மாதத்திற்குள் எமது நாடு கடுமையான முட்டை தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும். மேலும் இதன் காரணமாக ஜனவரி மாதத்திற்கு பிறகு முட்டை விலை உயரலாம் என்றார்.