மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஷ்ணன் எம்பிக்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நுவரெலியாவில் இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் ஜப்பானிய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் இரண்டாம் நிலை செயலாளர் கவோரி இமாய் கலந்துக்கொண்டார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளரும் கொட்டகலை வர்த்தக சங்க தலைவருமான புஸ்பா விஸ்வநாதனும் கலந்து கொண்டார்.
இவ்விசேட கலந்துரையாடலில் மலையக மக்கள் தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு மலையக பகுதிகளினதும் மலையக மக்களின் வாழ்வாதாரத்தையும் அபிவிருத்தியையும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.
மேலும் நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஹொலிரூட் ரத் டிவிசனில்
2018ம் ஆண்டு பத்து ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன். தாதியர் பயிற்சி நிலையம், தொழிற்பயிற்சி நிலையம், ஆசிரியர் பயிற்சி நிலையம், முன்பள்ளி பாடசாலை போன்றவற்றை அமைப்பதற்கான நிதி உதவிகளை தருவதாக ஜப்பானிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாகவும் ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் அந்த கோரிக்கைகள் அப்படியே நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் ராதாகிருஸ்ணன் தெரிவித்ததோடு அதை மீள கட்டியெழுப்புவதற்கான உதவியையும் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஜப்பானில் மலையக இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள்,ஜப்பானிய மொழியை இலங்கையில் பயில்வதற்கான ஆசிரியர்கள் உட்பட சிறுகைத்தொழில் செய்வோர்களுக்கான உதவிகள் போன்றனவும் இலங்கைக்கான ஜப்பானிய தூவரிடம் கலந்துரையாடப்பட்டது.அவ் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று அதனை உடனடியாக நிறைவேற்ற ஜப்பானிய அரசாங்கத்திடம் கலந்துரையாடப்பட்டு விரைவில் அதற்கான தீர்வினை வழங்குவதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கலந்துரையாடலை மேற்கொண்ட ராதாகிருஸ்ணனிடம் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இராபோஷணத்திலும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. .
நீலமேகம் பிரசாந்த்