குருநாகல் பிரதேசத்தில் கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவத்தின் சந்தேக நபராக ஓய்வு பெற்ற அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குருநாகல், புழுவல் பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் ஒருவரை அவரது மகன், திருமண வைபவத்தை நடத்துவதற்காக லட்சக்கணக்கான ரூபா பணம் தருமாறு கோரி தொடர்ந்தும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.இதனால் கோபமடைந்த தந்தை, மகன், உறங்கிக்கொண்டிருந்த போது கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார். அதனையடுத்து குருநாகல் ரிதிகம காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இவ்வாறு சரணடைந்த 65 வயதான நபரை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 29 வயதான ஹேரத் முதியன்சலாகே பராக்கிரம பண்டார ஜயலத் என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில், படுகொலை செய்யப்பட்ட இளைஞனே மூத்த மகன் என்பதுடன், அவரது திருமணம் எதிர்வரும் 10 ஆம் திகதி நடக்கவிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், சந்தேக நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது,
ஜயலத் என்ற இளைஞன் பல வருடங்களாக வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்துள்ளதுடன் அவ்வப்போது இலங்கை வந்து சென்றுள்ளார். இறுதியாக திருமணம் செய்து கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் இலங்கை வந்துள்ளார்.போதைப் பொருளுக்கு அடிமையான இந்த இளைஞன், தான் சம்பாதித்த பணத்தை போதைக்கே அழித்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பணம் இல்லாத காரணத்தினால், திருமண வைபவத்தை நடத்த தந்தையிடம் பணத்தை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
மகன் தான் விரும்பியது போல் யுவதி ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால், சந்தேக நபரான தந்தையும் தாயும் அதற்கு சம்மதிக்கவில்லை.
இவ்வறான பின்னணியிலேயே வீட்டில் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த மகனை, நேற்று அதிகாலை சந்தேக நபர் கோடாரியால் தாக்கி கொலை செய்து விட்டு, காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.65 வயதான இந்த சந்தேக நபர், குருகுல பாடசாலை ஒன்றில் அதிபராக கடமையாற்றியுள்ளார். இதனை தவிர பிரதேச கூட்டுறச்சங்க தலைவராகவும் பதவி வகித்துள்ளார். சந்தேக நபரின் மனைவி ஓய்வுபெற்ற ஆசிரியை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் போதைப் பொருளுக்கு அடிமையான மகனை அதில் இருந்து மீட்க பல முறை முயற்சித்துள்ளதுடன் புனர்வாழ்வுக்கும் உட்படுத்தியுள்ளனர்.
எனினும் மகன் தொடர்ந்தும் போதைப் பொருளை பயன்படுத்தி வந்துள்ளதாக சந்தேக நபர் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள தந்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் கொல்லப்பட்ட மகனின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக குருநாகல் விசேட சட்டவைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.