ஹெரன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்

0
156

ஹெரன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இப்போராட்டம் வெற்றியளிக்க ஏனைய தொழிற்சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.மஸ்கெலியா, சாமிமலை கவரவில, ஆகிய பகுதிகளுக்கு இன்று (25.11.2022) கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட ஜீவன் தொண்டமான், நிலைமையை நேரில் அவதானித்தார். தொழிலாளர்களுடனும் கலந்துரையாடினார்.

அதன்பின்னர் கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே, தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான அறைகூவலை அவர் அடுத்தார்.

இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,

“ஹெரன பெருந்தோட்ட நிறுவனம் தொடர்பில் தொழிலாளர்கள் மத்தியில் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தொழிலாளர்களின் வீட்டு தோட்டத்தையும் ‘பெக்கோ’ மூலம் அகற்றுவதற்கு தோட்ட நிர்வாகம் முற்பட்டுள்ளது. இதனை நாம் தடுத்து நிறுத்தினோம். இது சம்பந்தமாக தோட்ட நிர்வாகத்துடனும், பெருந்தோட்டத்துறை அமைச்சருடனும் பேச்சு நடத்தினோம். நிறுவனத்திடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. எனினும், வீட்டு தோட்டங்களை அகற்றும் முயற்சிக்கு பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஊடாக தடை விதித்துள்ளோம். அகற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

20 வீதமானோரே தோட்ட மக்கள் எனவும், ஏனையோர் வெளியாட்கள் எனவும் தோட்ட நிர்வாகம் கூறியது. ஆனால் இன்று நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்தேன். 20 வீதமானோர் என்பது தோட்டத்தில் வேலை செய்பவர்கள். ஏனைய 80 வீதம் அந்த தோட்டத்தை சேர்ந்த இளைஞர்கள். அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களை வெளியார் எனக் கூறமுடியாது.

இந்நிலையில் தேயிலை மீள் பயிர் செய்கை செய்யபோவதாக நிர்வாகம் கூறுகின்றது. ஆனால் தோட்டங்கள் காடாகியுள்ளன. அப்பகுதிகளில் மீள் பயிரிடல் செய்யலாம். மக்களின் காணிகளில் கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பொலிஸாரை களமிறக்கி தொழிலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை நாம் அனுமதிக்க போவதில்லை.

எனவே, ஹெரன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக அப்கோட், லிந்துலை பகுதிகளில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கின்றோம். தொழிலாளர்கள் வழமைபோல் வேலைக்கு செல்வார்கள். ஆனால் தோட்டத்தில் இருந்து ஒரு கிராம் கொழுந்துகூட வெளியில் செல்லக்கூடாது. சிலவேளை இரவுவேளை கொண்டுசெல்ல முற்படலாம். அதற்கு இடமளிக்க கூடாது. தோட்ட இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஏனைய தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கவேண்டும். தாக்கவரும் பாம்பை, தலையில் அடித்தால்தான் நமக்கு பாதுகாப்பு. ” – என்றார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here