கல்வி சுற்றுலாக்களின் தூரத்தை மட்டுப்படுத்த கல்வி அமைச்சு கவனம்

0
147

பாடசாலை மாணவர்கள் கல்வி சுற்றுலா பயணங்களுக்கு செல்லக்கூடிய தூரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, ஒரு நாளைக்கு மாணவர்கள் செல்லக்கூடிய அதிகபட்ச தூரம் 100 கிலோமீட்டராக மட்டுப்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

இதன்படி, கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் மாணவர்களை மாலை 6 மணிக்கு முன் அந்தந்த பாடசாலைகளுக்கு அழைத்து வர வேண்டும். எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் மேற்கொள்ளும் கல்விப் பயணங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

புதிய அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையை அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா நானுஓயா ரதல்ல பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதை அடுத்து புதிய சுற்று நிருபம் வெளியிடுவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். தேர்ஸ்டன் கல்லூரியைச் சேர்ந்த 43 மாணவர்கள் உட்பட 53 பேர் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here