ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் எனவும்,தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும், தேர்தல் இல்லை என்றால், இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது எவ்வாறு என தாம் கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியும் அறிவிக்கப்பட்டு,தேர்தலை நடத்தும் திகதியும் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசி கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டில் ஜனநாயகத்தை சீர்குலைத்து தேர்தலை நிறுத்துவதற்கு பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர் வேறு யாருமல்ல, ஜனாதிபதியே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.