கெப்பித்திகொல்லாவ, கனுகஹவெவ பிரதேசத்தில் உள்ள தாயொருவர், தனது இரு அங்கவீனமான மகன்களுடன் இன்று (05) தற்கொலை செய்யும் நோக்கில் கிணற்றில் குதித்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் ஒரு மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தாயுடன் மற்றைய மகன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு கெப்பித்திகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் கெப்பித்திகொல்லாவ கனுகஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் சாந்தகே ரவிது மிஹிரங்க என்ற இருபத்தொரு வயதுடைய இளைஞராவார். உயிரிழந்த இளைஞனின் 48 வயதுடைய தாயும் ஒன்பது வயது சகோதரனும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த இருபத்தொரு வயதுடைய ரவிந்து மிஹிரங்க முற்றாக ஊனமுற்றவர் எனவும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது சகோதரர் காது கேளாதவராக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளி பிள்ளைகள் இருவருக்கும் சிகிச்சை அளிக்க பணம் இல்லாத காரணத்தால் குறித்த பெண் இரு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிவில் பாதுகாப்புப் படை வீரரான கணவன் இன்று (05) அதிகாலை வேலைக்குச் சென்றுவிட்டு காலை 10 மணியளவில் வீடு திரும்பினார்.மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் வீட்டில் காணாததால், சுற்றும் முற்றும் பார்த்தபோது மூவரும் கிணற்றில் கிடபபதைக் கண்டார் .இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.