வீட்டுப்பாடம் செய்யாத 9 வயது மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

0
177

ஹோமாகம பாடசாலையில் கல்வி கற்கும் ஒன்பது வயது சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாடசாலையின் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் பனாகொட, மெத மண்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஆசிரியர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த ஆசிரியருக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பில் படிக்கும் 9 வயது சிறுமி, கடந்த 23ம் திகதி ஆசிரியரால் தாக்கப்பட்டதுடன், சிறுமி வீட்டுக்கு வந்த பின்னர் தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தாய் ஹோமாகம தலைமையக காவல்துறைக்கு வந்து சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, தாக்கப்பட்டதாக கூறப்படும் ஒன்பது வயது சிறுமி ஹோமாகம தலைமையக வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பிவைக்கப்பட்டார்.

சட்ட வைத்திய அதிகாரி வழங்கிய வைத்திய அறிக்கையின் பிரகாரம் சிறுமி தாக்கப்பட்டமை தெரியவந்துள்ளதுடன், அவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமிக்கு செய்யக்கொடுத்த வீட்டு வேலையை புறக்கணித்ததே இந்த தண்டனைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் ஹோமாகம தலைமையக காவல்துறை பரிசோதகர் பிரனீத் மணவடு அவர்களின் பணிப்புரையின் பேரில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் அஜந்த தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here