சன நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு

0
111

ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பள்ளி ஒன்றில் ரமலான் பண்டிகைக்காக நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட மோதலில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்கொடையை பெற நூற்றுக்கணக்கான நபர்கள் பள்ளியில் குவிந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன. கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான காட்சிகள் Al Masirah தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் 13 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சனாவில் உள்ள சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஹூதி போராளிகள் வானை நோக்கி சுட்டதாகவும், அப்போது, மின்கம்பியை தோட்டா தாக்கியதில் வெடிப்பு ஏற்பட்டது என்றும் இதனால் மக்கள் பீதியடைந்து அங்குமிங்கும் ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு பேர் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, நன்கொடை விநியோகத்திற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here