ஹட்டனிலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரொத்தஸ் கொலனி இ ங்கு வாழும் சுமார் 600 குடும்பங்கள் கடந்த 20 வருட காலமாக சுத்தமான குடிநீர் இன்றி சாக்கடை நீரினை குடிப்பதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த குடிநீர் விடயம் குறித்து மலையக அரசியல் தலைவர்கள் முதல் நாட்டின் ஜனாதிபதி பிரதமர் வரை தெளிவுபடுத்தப்பட்ட போதிலும் அவர்களுக்கு இது வரை எந்த வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்பட வில்லை என்றும் தேர்தல் காலங்களில் இந்த விடயத்திற்கு நிரந்தர முற்றுபுள்ளி வைப்பதாக தெரிவித்து வாக்குகளை பெற்று செல்வதாகவும், இவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த குடிநீரினை நாளாந்தம் பருகுவதன் காரணமாக பலர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வயோதிபர்கள் சிறுவர்கள் அடிக்கடி வயிற்று வலி, வாந்தி மற்றும் ஏனைய நோய்கள் காரணமாகவும் மருந்து எடுத்து வருவதாகவும் இங்கு வாழும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரதேசத்திற்கு சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்காததன் காரணமாக இங்கு வாழும் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தும் நீரினை குடிப்பதற்கும் பயன்படுத்துவதாகவும் இந்த நீரில் ஹட்டன் ஆரியகம மற்றும் ஆஞ்சநேயர் ஆலய பகுதியில் வசிக்கும் மக்களால் பயன்படுத்தப்பட்டு விடுவிக்கப்படும் கழிவு நீர் குறித்த நீரில் கலப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
சுத்தமான குடிநீரினை பெற்றுக்கொள்வதற்காக மலையகத்தில் உள்ள அரசியல் தலைவர்களிடம் பல தடைவைகள் தெரிவித்த போதிலும் இது வரை தீர்வு பெற்றுக்கொடுக்க வில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த நீர் குடிப்பதற்கு உகந்ததா? என்று பிரதேச செயலகத்தில் சோதனை செய்து பார்த்த போது குடிப்பதற்கு உகந்ததில்லை என சுகாதார பிரிவினர் தெரிவித்தாகவும் வேறு வழியின்று இந்த நீரினை குடித்து வருவதாகவும் பலர் கவலையுடன் தெரிவித்தனர்.
ரொத்தஸ் கொலனிக்கு குடிநீரினை பெற்றுக்கொள்வதற்காக நீர் வழங்கல் வடிகால் சபையிடம் சென்று பேசிய போது அதற்கு கோடிக்கணக்கில் செலவிட வேண்டி வருவதாக தெரிவித்ததாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரதேசத்தின் குடிநீர் விடயம் குறித்து தற்போது உள்ள நீர் பாசன அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் அதிக பணம் செலவிடா விட்டாலும் இருக்கும் நீரினை சுத்தப்படுத்தி பெற்றுக்கொடுத்தாலே போதுமானதாக இருக்கும் என இன்னும் சிலர் தெரிவித்தனர்.
எது எவ்வாறான போதிலும் நீர் வளம் நிறைந்த மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் இன்றி கஸ்ட்டப்படுவது மிகவும் வெட்கப்பட வேண்டிய விடயம் என சிங்கள மொழி சகோதரர் ஒருவர் தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்