கொழும்பில் நடிகை ஒருவரை ஏமாற்றி 65 இலட்சம் ரூபா பணத்தை பெற்று மோசடி செய்த குற்றத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகப்புத்தக கணக்கின் ஊடாக தொடர்பை ஏற்படுத்தி திருமணம் செய்வதாக உறுதியளித்து, அந்த நடிகையிடம் இருந்து 65 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட 23 வயதுடைய குறித்த இளம் பெண் தற்போது கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருவதுடன், இவர் நடிகை எனவும் கூறப்படுகிறது.
இலங்கையின் பிரபல கிரிக்கட் வீரர்கள் மற்றும் நடிகர்களின் புகைப்படங்களுடன் கூடிய முகப்புத்தக கணக்கை, சமூக நல ஆர்வலர் எனக் கூறி சந்தேகநபர் பயன்படுத்தி வந்ததாக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் மஹர சிறைச்சாலையினரால் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா நீதிமன்றங்களில் பணியாற்றும் இரண்டு சட்டத்தரணிகளை திருமணம் செய்வதாக கூறி 99 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு நீதிமன்றில் பணியாற்றும் சட்டத்தரணி ஒருவரை முகபுத்தக கணக்கின் ஊடாக திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் அதே நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ரத்னபுர கஹவத்தை பகுதியைச் சேர்ந்த பி.எல்.லசந்த லியனகே என்ற 27 வயதுடைய சந்தேகநபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.