முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் மின்னேரிய இராணுவ முகாமில் கடமையாற்றும் வீரர் என்பது தெரியவந்துள்ளது.
கண்டி கட்டுஸ்தோட்டை பிரதேசத்தில் 17 வயதான பாடசாலை மாணவியின் நிர்வாண காணொளியை இணையத்தளத்தில் வெளியிடப் போவதாக கூறி, அவரை அச்சுறுத்திய 19 வயதான இராணுவ வீரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த பாடசாலை மாணவி கடந்த 11 ஆம் திகதி பெற்றோருடன் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது நிர்வாண காணொளியை இணையத்தளத்தில் வெளியிடப் போவதாக கூறி ஒருவர் மிரட்டுவதாக முறைப்பாடு செய்துள்ளார்.
டிக் டொக் சமூக ஊடகம் அறிமுகமான நபருடன் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பில் பின்னர், அந்த நபரின் கோரிக்கைக்கு அமைய நிர்வாண காணொளி அழைப்பை எடுத்துள்ளதாக மாணவி வழங்கிய தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த காணொளியை பதிவு செய்துக்கொண்டுள்ள நபர், அதனை மீண்டும் மாணவிக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் தனக்கு தேவையான நேரத்தில் நிர்வாணமாக காணொளி அழைப்புகளை எடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால், இந்த காணொளியை இணையத்தளத்தில் பதிவேற்றுவேன் என மிரட்டியுள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் மின்னேரிய இராணுவ முகாமில் கடமையாற்றும் வீரர் என்பது தெரியவந்துள்ளது.
பொலிஸ் இராணுவ முகாமுக்கு வழங்கிய தகவலுக்கு அமைய முகாம் அதிகாரிகள் சிலர், சந்தேக நபரை அழைத்து வந்து கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார், அவரது செல்போனையும் முறைப்பாடு செய்த மாணவியின் செல்போனையும் விசாரணைகளுக்காக எடுத்துக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேக நபரை 15 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஒரு லட்சம் ரூபா என இரண்டு சரீரப்பிணையிலும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.அன்றைய தினம் முறைப்பாட்டாளர் மற்றும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.