என்னை இப்படி செய்ய வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. நுவரெலியா – லிந்துலை கிளினிக்கல்ஸ் தோட்டத்தை சேர்ந்த 30 வயதுடைய சிவரஞ்சனி என்பவர் வீட்டு வறுமை காரணமாக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
இவர் ஒரு பிள்ளையின் தாயாவார். இவர் கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். எனினும், அவருடைய எதிர்பார்ப்புகளும் கனவுகளும் ஒரே நிமிடத்தில் களைந்து போனது.
இந்த சம்பவம் தொடர்பில் மனம் திறந்துள்ள சிவரஞ்சனி தெரிவித்திருப்பதாவது,
“ நான் மொழி தெரியாமல் தான் வெளிநாட்டுக்குச் சென்றேன். இதனால் அந்த வீட்டு எஜமானி, என்னை மொழி தெரியவில்லை என துன்புறுத்தினார். என்னுடைய பிள்ளையின் எதிர்காலம் மற்றும் எங்கெளுக்கென்று ஒரு வீடு வேண்டும் என எண்ணியே அவை அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன்.
அங்கு சென்ற ஓரிரு நாளிலேயே நான் ஏணியிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். அதை பொருட்படுத்தாது என்னை கழிவறையை சுத்தம் செய்யும் படியும் ஏனைய வேலைகளை செய்யமாறும் துன்புறுத்தினார்கள்.
இது தொடர்பில் முகவர் நிலையத்துக்கு தெரிவித்தும், அவர்களும் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. இதற்கிடையில், என்னுடைய குடும்பத்தவர்களுக்கும் இது தொடர்பில் அவ்வப்போது மெசேஜ்(குறுஞ்செய்தி) மூலம் தெரிவித்து வந்தேன்.
முகவர் நிலையத்தினரோ, மீண்டும் என்னையே திட்டினார்கள். மீண்டும் நாட்டுக்கு செல்ல வேண்டுமானால் பணம் செலுத்துமாறு கட்டாயப்படுதினார்கள்.
பின் அந்த வீட்டு எஜமானி, என்னை அடித்து, துப்புறுத்தி கடிதமொன்றை எழுதி தருமாறு கேட்டார். அந்த கடிதத்தில் எனது அம்மா, அப்பா, கணவர், பிள்ளை ஆகியோருக்கு எது நடந்தாலும் நான் போகமாட்டேன், என்னுடைய சுய விருப்பத்தின் பெயரில் நான் இங்கு 3 வருடங்களுக்கு இங்கேயே இருப்பேன் என எழுதி கைரேகை வைத்து கேட்டார்கள்.
நான் அதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்தால், அவர்கள் கோபத்தில் என்னை கொண்டு முகவர் நிலையத்தில் விட்டு விடுவதாக கூறி, என்னை முகவர் நிலையம் செல்வதற்கு தயாராக சொன்னார்கள்.
இதன்போது, நான் கழிவறையிலிருந்து வெளியில் வரும் போது, என்னை தாக்கி, ஊசிகளால் குத்தி மிகவும் சித்ரவதை செய்தார்கள். என்னை இப்படி செய்ய வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை.
உடம்பில் ஊசிகளுடன் 2 நாட்கள் என்னை வேலை வாங்கினார்கள். அதன் பிறகு இலங்கையை சேர்ந்த சகோதரி ஒருவர் தான் அரபு மொழியில் அந்த வீட்டு உரிமையாளர்களிடம் கதைத்து எனக்கு உதவி செய்தார்.
அதன் பிறகு தான் நான் முகவர் நிலையத்துக்கு சென்றேன். அங்கு வைத்து தான் என்னுடைய உடலில் ஊசிகள் இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு அவர்கள் எனக்கு டிக்கெட்(விமான பற்றுச்சீட்டு) செய்து இலங்கைக்கு அனுப்பிவைத்தார்கள். ” என தெரிவித்துள்ளார்.
இலங்கை திரும்பியுள்ள சிவரஞ்சனி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் அவரது உடலில் 5 குண்டூசிகள் காணப்பட்டதாகவும் அதில் 2 குண்டூசிகள் காலில் இருந்து தற்போது எடுக்கப்பட்டதாகவும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மஹேந்திர செனவிரத்ன தெரிவித்தார்.
அகற்றப்பட்ட குண்டூசிகள் சுமார் 3 சென்றிமீற்றர் நீளமுடையது எனவும் வெகுவிரைவில் ஏனைய குண்டூசிகளையும் அகற்றுவதற்கான திகதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிவரஞ்சனியின் கணவர் அக்கரைப்பத்தன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கூறியிருப்பதாவது,
முகவர் நிலையத்தில் 10 இலட்ச ரூபாவை செலுத்த கூறினார்கள் செலுத்த தவறுமிடத்து அங்கேயே செத்தால் சாகட்டும் எனவும் முகவர் நிலையத்தில் தெரிவித்தனர்.
மேலும், எங்களால் அவ்வளவு பணம் செலுத்தமுடியாது என குறிப்பிட்ட சிவரஞ்சனியின் கணவர், பின் 50,000 ரூபாய் பணம் செலுத்தி அவரை மீட்டதாகவும் எமக்கு நிகழ்ந்த இவ்வாறான விடயம் வேறு யாருக்கும் நிகழ கூடாது எனவும் மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முகவர் நிலையம் தெரிவிப்பது என்ன?
சம்பவம் தொடர்பில் வெகு விரைவாக ஆராய்ந்து பதிலளிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும், வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும் பெண்கள் காலம் காலமாக அடித்து துன்புறுத்தப்படுவதும், வேலைக்கேற்ற ஊதியம் வழங்காமல் ஏமாற்றப்படுவது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் வழக்கமாகிவிட்டது.