அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். அமெரிக்கா ஊடகவியலாளர் ஈ. ஜீன் கரோலுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்த அவதூறு வழக்கை நியூயோர்க் சமஷ்டி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். அவர் மீது தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளும், அதற்கு முன்னர் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளும் அவரை நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக மீண்டும் போட்டியிட ஒருபுறம் முயற்சித்து வரும் நிலையில், மறுபுறம் தொடர் வழக்கு விசாரணைகளால் அவர் திணறடிக்கப்பட்டு வருகிறார்.
அமெரிக்க ஊடகவியலாளர் ஈ. ஜீன் கரோல் சம்பந்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கில் 5 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழங்குமாறு டொனால்ட் டிரம்ப்பிற்கு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், மே மாத தீர்ப்பில், பாலியல் துன்புறுத்தல் குற்றத்திற்காக மட்டுமே அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதாகவும், வன்புணர்வு குற்றத்திற்காக அல்ல எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
எவ்வாறாயினும், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கரோல் ஊடகங்களிடம் கூறி வந்துள்ளார்.
இதனையடுத்து கரோலுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நேற்று நியூயோர்க் மாவட்ட சமஷ்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் போது கருத்து வெளியிட்டுள்ள நீதிபதி லூயிஸ் கப்லான், கரோல், டொனால்ட் டிரம்ப்பால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார் என்பது உண்மை எனவும் எனினும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளார்.