சென்னை, டெல்லி மற்றும் புனே நகரில் நடைபெறும் இந்தியா அணி விளையாடும் போட்டிகளின் டிக்கெட் விற்பனைகள் ஆகஸ்ட் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 19ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
குறித்த போட்டிக்கான டிக்கெட் விற்பனைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய, Live Cricket Scores & News International Cricket Council (cricketworldcup.com) என்ற இணையத்தளம் மூலம் ரசிகர்கள் தங்கள் ஆசனங்களை முன்பதிவு செய்து கொள்ளமுடியும்.
சென்னை, டெல்லி மற்றும் புனே நகரில் நடைபெறும் இந்தியா அணி விளையாடும் போட்டிகளின் டிக்கெட் விற்பனைகள் ஆகஸ்ட் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன்பின்னர் செப்டம்பர் முதலாம் திகதி தரம்சாலா, லக்னோ மற்றும் மும்பை நகரங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனைகளும் நடைபெறவுள்ளது.
செப்டம்பர் இரண்டாம் திகதி பெங்களூர் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும், செப்டம்பர் மூன்றாம் திகதி அஹமதாபாத்தில் நடைபெறும் இந்திய போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும், செப்டம்பர் 15ஆம் திகதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.
மேலும் கடந்த வாரம் உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணையில் சில மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது உலகின் மிகப்பெரிய மைதானமான அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஒக்டோபர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மேலும் பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி ஒக்டோபர் 10ஆம் திகதியும் , அவுஸ்திரேலியா – தென்னாப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி ஒக்டோபர் 13ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.நியூசிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒக்டோபர் 13ஆம் திகதி பகல் – இரவு ஆட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
இங்கிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ஒக்டோபர் 10ஆம் திகதி தரம்சாலாவில் நடைபெற இருந்த பகலிரவுப் போட்டியானது பகல் நேர ஆட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் இப் போட்டி காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதனிடையே, நவம்பர் 12ஆம் திகதி அவுஸ்திரேலியா – பங்களாதேஷ் மோதும் போட்டி பகல் ஆட்டமாக புனேவிலும், இங்கிலாந்து – பாகிஸ்தான் போட்டி நவம்பர் 11ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டி நடப்புச் சம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஒக்டோபர் ஐந்தாம் திகதி அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது. முதலாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 15ஆம் திகதி மும்பையிலும், நவம்பர் 16ஆம் திகதி இரண்டாவது அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது.
நவம்பர் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று இறுதி போட்டியானது அஹமதாபாத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.