கோழி இறைச்சியின் விலை 100 ரூபாவால் குறைவடைகிறது

0
254

உள்நாட்டு சந்தையில் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் தொடர்ந்து முட்டைகளை இறக்குமதி செய்யுமென அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலையினை 100 ரூபாவினால் குறைப்பதற்கு கோழிப்பண்ணை தொழிற்துறையினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சர் தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதன் பின்னரான எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இலங்கையில் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்தன.

அத்துடன், பல்வேறு பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்ட நிலையில், கால்நடைகளுக்கான தீவனப் பொருட்களை இறக்குமதி செய்யவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

கோழித்தீவன விலை அதிகரிப்பு, இறக்குமதி கட்டுப்பாடு, கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான தாய் விலங்குகள் இன்மை போன்ற பல்வேறு காரணிகளினால் முட்டை பற்றாக்குறைக்கு மேலதிகமாக கோழி இறைச்சிக்கும் பற்றாக்குறை நிலவியது.

இதன் காரணமாகவே கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்ததுடன், கோழி இறைச்சி கிலோ ஒன்று 1500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையிலே, சோள இறக்குமதிக்கான வரியினை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. சோளத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் பிரகாரம், சோளம் கிலோ ஒன்றுக்கான இறக்குமதி வரி 75 ரூபாயில் இருந்து 25 ரூபாவாக குறைக்கப்பட்டது.

சோளத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்படத்தைத் தொடர்ந்து அதன் பயனை நுகர்வோருக்கு வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, கோழி இறைச்சியின் விலை எதிர்வரும் நாட்களில் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, உள்நாட்டு சந்தையில் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் தொடர்ந்து முட்டைகளை இறக்குமதி செய்யுமென அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவையின் தீர்மானத்திற்கமைய நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு முட்டையினை இறக்குமதி செய்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here