பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (29) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 58 பேர் உயிரிழந்ததுடன் 100 இற்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் 3 நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஸ்துங் நகரில் மிலாது நபி பிறந்த நாளை ஒட்டி மக்கள் பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்ட போது வாசலில் காவல்துறையினரின் வாகனத்தின் அருகே நின்றிருந்த தற்கொலைப்படையைச் சேர்ந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இந்த சம்பவத்தில் 54 பேர் உயிரிழந்ததுடன் நூறுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை.இதேவேளை ஹங்கு மாவட்டத்திலும் பயங்கரவாதிகள் மசூதிக்குள் புகுந்து வெடிகுண்டை வெடிக்கச்செய்தனர். இதில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மசூதியின் மேற்கூரை உடைந்து விழுந்ததால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் 3 நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.