10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

0
133

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (11.10.2023) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இன்று (11.10.2023) முக்கிய சந்திப்புகளில் ஈடுப்பட்டதுடன், ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஆரம்பமாகவே 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இலங்கை சார்பில் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்தியா சார்பில் கையொப்பமிட்டார்.

அத்துடன், இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள 126 வீடுகள், நிகழ்நிலை ஊடாக திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.பதுளை, மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலேயே மேற்படி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்திய அரசால் மலையகத்தில் ஏற்கனவே 4 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.பாரத பிரதமர் மோடி, மலையகம் வந்திருந்தவேளை 10 ஆயிரம் வீடுகளுக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டது.

முன்னர் வீடொன்றுக்கு 10 இலட்சம் ரூபா உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் வீடொன்றுக்கு 28 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் தேனுகா விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர் எம். ரமேஸ்வரன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி. அருணி விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் திரு.தினுக் கொலம்பகே மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி என பல முக்கியஸ்தர்களும் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here