இந்தியாவில் 17 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு ;

0
91

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாட்கள் போராட்டத்தின் பின்பு செவ்வாய்க்கிழமை (28) பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய அதிவேக வீதியில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது கடந்த 12 ஆம் திகதி திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.

அந்த சுரங்கப்பாதையில் 60 மீட்டருக்கும் அதிகமான உடைந்த பாறைகள், கொங்கிரீட் மற்றும் முறுக்கப்பட்ட உலோகம் இருந்ததால் அவர்கள் வெளியேற முடியாம தடுத்ததால், அதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்நிலையில் 17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுரங்க விபத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர்.

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டதை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கைத்தட்டியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர்.பல்வேறு சவால்களை கடந்து தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்டுள்ள மீட்புக்குழுவினருக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்க அயராது உழைத்த அனைவருக்கும் இந்திய ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு,

“உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதை அறிந்து நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். 17 நாட்களாக சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சந்தித்த தடைகள், மனித சகிப்புத் தன்மைக்கு சான்று. அவர்களின் மன உறுதிக்கு தேசம் தலை வணங்குகிறது. வரலாற்றில் மிகவும் கடினமான மீட்புப் பணிகளில் ஒன்றான இதனை நம்பமுடியாத மன உறுதியுடன் செயல்பட்டு தொழிலாளர்களை மீட்டுள்ள மீட்புக்குழுவினர், நிபுணர்களை வாழ்த்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தி பிரதமர் மோடி,

உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்கிறார்கள். சுரங்கப்பாதையில் சிக்கிய நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், உங்கள் தைரியமும் பொறுமையும் அனைவரையும் ஊக்குவிக்கிறது. நீங்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன்.தொழிலாளர்களின் குடும்பங்கள் காண்பித்த பொறுமையும், தைரியமும் மிகவும் பாராட்டத்தக்கது. சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்க அயராது உழைத்த மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள் எனக்கூறியுள்ளார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்,

“எங்களின் சொந்தத்தைப் பாதுகாக்க எந்தக் கல்லையும் விடமாட்டோம். சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்க அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நம்பிக்கையைக் கைவிடாமல் இத்தகைய துன்பங்களைச் சந்தித்தவர்களின் மன உறுதியையும் மன உறுதியையும் பாராட்டுங்கள்” என்று அதில் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here