”ஜனவரி மாதம் பாடசாலை மாணவர்களுக்கான சீசன் டிக்கெட்டுகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று வற் வரி விதிப்பால் மக்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகியுள்ளனர்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர்கள் குழுவொன்று துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்ஸகாவா மற்றும் தியாகொவுல்லா ஆகிய இரண்டு கப்பல்களை பயன்படுத்தி கடந்த இரு நாட்களுக்கு முன்பு கடலில் விருந்துபசார கொண்டாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதற்கு துறைமுக அமைச்சர் எழுத்து மூல அனுமதியும் வழங்கியுள்ளார்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடு வங்குரோத்தாகி கிடக்கும் இந்த இக்கட்டான தருணத்தில் மக்கள் பணத்தில் இயற்கும் துறைமுகத்தில் உள்ள உணவகத்தின் ஊடாக உணவு, மதுபானம் மற்றும் குடிபான வகைகளை பெற்றுக் கொண்டு நாட்டிற்குச் சொந்தமான கப்பல்களைப் பயன்படுத்தி எரிபொருளை விரயம் செய்து, நடுக்கடலில் விருந்து நடத்தி கொண்டாட்டுகின்றனர். மக்கள் நெருக்கடியில் இருக்கும் இந்தச் சூழலில் கும்மாளமடிக்க முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விடயம்.
அமைச்சர்களின் தனிப்பட்ட செலவில் இந்த விருந்துபசாரங்களை நடத்துவது பிரச்சினையல்ல. அரச வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான விருந்துபசாரங்கள் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த விருந்துக்கு சிவப்பு கம்பளம் கூட விரிக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் பணத்தை செலவு செய்து விருந்து வைப்பது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.