நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல் (IPL) சீசன் 17 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக விளையாடி வந்த முஸ்தபிசுர் ரஹ்மான் (mustafizur rahman) அணியிலிருந்து பாதியிலேயே விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்ற நிலையில் இவரது இந்த இடைவிலகல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு பேரிழப்பாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பித்ததிலிருந்து முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷ பத்திரனவுடன் இணைந்து சிறப்பாக விளையாடியுள்ளார். ஒரு சில ஆட்டங்களை தவிர மற்ற போட்டிகளில் எல்லாம் தன்னுடைய பங்களிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் நல்ல முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.
சிஎஸ்கே அணிக்காக நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதில் அவருடைய சிறந்த ஆட்டமாக 29 ஓட்டங்கள் நான்கு விக்கெட்டுகளை எடுத்தது விளங்குகின்றது, கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
இதில் முதல் சீசனில் அவர் 17 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் 2021 ஆம் ஆண்டு 14 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதற்கு பிறகு 2024 ஆம் ஆண்டு தான் 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
இந்நிலையில் தான் முஸ்தபிசுர் ரஹ்மானை சென்னை அணி நிர்வாகம் வழி அனுப்பி வைத்திருக்கிறது. இதில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் அணித்தலைவரும் தற்போதைய விக்கெட் காப்பாளருமான எம்.எஸ்.தோனி (M.S.Dhoni) தன்னுடைய ஜெர்ஸியில் கையெழுத்து போட்டு முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரஹ்மான் அதில், “எல்லாவற்றிற்கும் நன்றி மஹி பாய். உங்களைப் போன்ற ஜாம்பவான்களுடன் ஒரே உடை மாற்றும் அறையைப் பகிர்ந்து கொண்டது ஒரு சிறப்பு உணர்வாக இருந்தது. ஒவ்வொரு முறையும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. நீங்கள் தமக்கு பல யுக்திகளையும் நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். இனி கூடிய சீக்கிரம் உங்களுடன் மீண்டும் விளையாடுவேன் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
Thanks for everything Mahi bhai. It was a special feeling to share the same dressing room with a legend like you. Thanks for keeping faith in me everytime. Appreciating your valuable tips, I will remember those things.
Looking forward to meeting and playing with you again soon. pic.twitter.com/xEN9TYY9x1
— Mustafizur Rahman (@Mustafiz90) May 3, 2024