ரூ. 1700 வழங்க முடியாவிட்டால் தோட்ட முதலாளிமார் கம்பனிகளை கைவிட்டு வீட்டுக்குச் செல்ல தயாராக வேண்டும்.

0
75

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரத்து எழுநூறு ரூபாவாக அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில் அதை நடைமுறைபடுத்த முடியாவிட்டால் தோட்ட முதலாளிமார் கம்பனிகளை கைவிட்டு வீட்டுக்குச் செல்ல தயாராக வேண்டும். என இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிப்பின் போதும் அதை நடைமுறைப் படுத்தாமல் பல இழுத்தடிப்புகளுக்கு பிறகு இறுதியில் நீதிமன்றத்தை நாடினர். ஆனால் அவர்கள் கோரிய இடைக்கால தடை உத்தரவு கிடைக்கவில்லை. அதனால் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை விரும்பியோ விரும்பாமலோ வழங்க வேண்டிய நிலைக்கு பெருதேட்ட கம்பனிகள் தள்ளப்பட்டன.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெருந்தோட்ட கம்பனிகளின் இணக்கப்பாடு நிர்ணயிப்பதே சிறந்தது என்பதை கருத்திக்கொண்டே தொழிற்சங்கம் என்ற வகையில் நாம் பேச்சுவார்த்தையில் நாட்டம் கொண்டிருந்தோம். ஆனால் அதைப் பெருந்தோட்டக் கம்பனிகள் உதாசீனம் செய்து செயல்பட்டதனாலேயே மீண்டும் சம்பள நிர்ணய சபைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கட்டளையாகும். 15 நாள் ஆட்சேபனை காலத்துக்குப் பிறகு இது நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

சம்பள நிர்ணய சபை தொழில் அமைச்சின் கீழ் நாட்டின் சட்டங்களுக்கு அமைவாகவே செயல்பட்டு வருகிறது. இதை அறிந்தும் அறியாதவர்கள் போல் சில அரசியல்வாதிகள் பேசுவதை அவதானிக்க முடிகிறது. இவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று உதட்டளவில் கூறினாலும் இவர்களின் உள்ளத்தில் அது கிடைத்துவிட கூடாது என்ற நப்பாசையே பொதிந்து கிடக்கிறது என்பது அவர்களின் பேச்சிலிருந்து வெளிப்படையாக தெரிகிறது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் எந்த மேடையில் இருந்து வெளிப்பட்டிருக்கிறது என்பதை நோக்காமல் அது தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட போகின்றது என்பதை தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்றவர்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

சம்பளம் அதிகரிப்பு வழங்கும்படி வெளி வந்திருக்கின்ற வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை பெருந்தோட்ட கம்பனிக்கு வழங்குவதில் இருந்து விடுபட்டு அடுத்த பாராளுமன்றத்தை குறி வைத்து காட்டிக்கொடுப்புகளையும் துரோகங்களையும் மீண்டும் சுமந்து செல்வதா என்பதை அரசியல் லாப நோக்கோடு செயல்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்க வேண்டும்.

தோட்டத் தொழிலாளரின் சம்பள விடயத்தில் எதிர்க்கட்சிகளின் அரசியல் உள்நோக்கம் தற்போது வெளிப்படையாக தெரிய தொடங்கிவிட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரசை விமர்சித்து வாக்கு வாங்கி அதிகரித்துக் கொள்ள வேறு வழிகளை கையாள வேண்டுமே தவிர தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை கையில் எடுக்கக் கூடாது.தமது அரசியல் லாபத்திற்காக தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்திலும் வயிற்றிலும் அடிப்பதை நிறுத்திவிட்டு இந்த விடயத்திலாவது ஓர் வழி நின்று நேர்மையாக செயல்படுமாறு மலையக எதிரணி தொழிற்சங்கங்களை வினையமாக வேண்டிக் கொள்கிறோம். எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here