தசையைத் தின்னும் புதிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருகிறது. இது பரவ ஆரம்பித்த இரண்டு நாள்களில் உயிரைக் கொல்லும் அபாயம் கொண்டது.
இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜூன் 2ஆம் தேதி முதல் 977ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.சீனாவில் தொடங்கிய கரோனா பெருந்தொற்று அபாயத்துக்குப் பிறகு, ஜப்பானில் தசையைத் தின்று 2 நாள்களில் உயிரைக் கொல்லும் பாக்டீரியா பரவி வருகிறது.
இந்த நோய்க்கு ‘ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சின்ட்ரோம்’ (எஸ்டிஎஸ்எஸ்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது மிகத் தீவிரமான உடல்சோர்வை ஏற்படுத்தி 2 நாள்களில் உயிரைக் கொல்லும் அபாயம் கொண்டது.
ஜப்பானில் இந்தவகை பாக்டீரியாவால் (ஜூன் 2ஆம் தேதிமுதல்) 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 941 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதைவிட கூடுதலாக பதிவாகியுள்ளது.
1999ஆம் ஆண்டுமுதல் தொற்று நோய்கள் பரவலைக் கண்டறியும் தேசிய நிறுவனம் இந்த பாக்டீரியாவை கண்காணித்து வருகிறது.
குழந்தைகளிடையே ‘ஸ்ட்ரெப் த்ரோட்’ எனப்படும் வீக்கம் மற்றும் தொண்டை வலியை குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஏற்படுத்துகிறது.சிலவகை பாக்டீரியாக்கள், மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், தீவிர மூச்சுப் பிரச்னை, திசு செயலிழப்பு, உறுப்பு செயலிழப்பு மற்றும் இறப்பு போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது.
இது குறித்து பேசிய டோக்கியோ பெண்கள் மருத்துவ பல்கலைக் கழக பேராசிரியர் கென் கிகுச்சி, இதில் அதிக இறப்புகள் 48 மணிநேரத்தில் நடக்கிறது. காலையில் ஒரு நோயாளி பாதத்தில் வீக்கம் இருப்பதை உணர்ந்தால், மதியத்துக்குள் முட்டி வரை பரவுகிறது. மேலும், 18 மணிநேரத்தில் இறக்கவும் நேரிடுகிறது. இந்த ஆண்டு 2,500 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்படலாம். இது 30 சதவீத இறப்பு விகிதத்துக்கு வழிவகுக்கும் என அவர் கூறினார்.கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், புண்களை பாதுகாப்புடன் கையாள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் குடலில் இருக்கலாம். மலம் கழிக்கும்போது அவை கைகள் மூலம் பரவலாம் என எச்சரிக்கப்படுகிறது.
இதே வேளை இதனை எதிர்கொள்ள இலங்கை எந்த முன் ஆயத்தும் இல்லை என சுகாதர தரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.
ஜப்பான் மட்டுமின்றி 2022ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து ஐரோப்பாவின் 5 நாடுகளிலும் ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சின்ட்ரோம் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் முடிவு வந்ததே இவ்வகை பாக்டீரியாக்கள் பரவ முக்கிய காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.