பலாங்கொடை பகுதியில் மனைவி இறந்துவிட்டதாக பொய் கூறி சவப்பெட்டி, மாலை, உடைகள் மற்றும் இறுதி சடங்கு பொருட்களை கணவர் வீட்டிற்கு எடுத்துச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பலாங்கொடை நகரில் உள்ள மலர்சாலைக்கு சென்று 40,000 ரூபா பெறுமதியான சவப்பெட்டி, மாலை, உடைகள் மற்றும் இறுதி சடங்கிற்கு தேவையான பொருட்களை கணவர் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் பிரேத பரிசோதனை அதிகாரியும் மற்ற அதிகாரிகளும் கூறியதாக அவர் மலர்சாலை உரிமையாளரிடம் பொய் கூறியுள்ளார்.
இதனை நம்பிய மலர்சாலை ஊழியர்கள் அவருடன் சவப்பெட்டி உள்ளிட்ட உபகரணங்களை அவரது வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
இதன்போது ஏன் வீட்டிற்கு சவப்பெட்டி கொண்டு வந்தீர்கள் என்று பிள்ளைகள் வினவிய போது தாய் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.தாய் இறக்கவில்லை என்றும், தாய் சமையல் அறையில் இருப்பதாகவும் குழந்தைகள் கூறியதையடுத்து, மலர்சாலை ஊழியர்கள் சவப்பெட்டியை திரும்ப எடுக்க முயன்றுள்ளனர். இதன்போது அவர்களை மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து மகள் இது தொடர்பாக 119 என்ற அவசர எண்ணிற்கு தகவல் வழங்கிய நிலையில், மலர்சாலை உரிமையாளரும் பலாங்கொடை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.அவசர தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பலாங்கொடை பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீட்டுக்குச் சென்று சவப்பெட்டியை மலர்சாலையில் ஒப்படைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும், சவப்பெட்டிக்காக கணவர் செலுத்திய 40000 ரூபா பணத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்காக மலர்சாலைக்கு வருமாறு மனைவிக்கும், கணவனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.