தேர்தல் குண்டே 1,700 – அரசாங்கமும், கம்பனிகளும் இணைந்து நாடகம் – ஹட்டனில் திகாம்பரம் தெரிவிப்பு

0
63

தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களை ஏமாற்றியுள்ள இந்த அரசாங்கத்துக்கு வருகின்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என்பதுடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.

ஹட்டனில் நேற்று (28.07.2024) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் மேலும் கூறியவை வருமாறு,

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என்று மே முதலாம் திகதி கொட்டகலைக்கு வந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோர் உறுதியளித்தனர். ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கூட மீளப்பெறப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக தேர்தல் குண்டாகவே 1,700 ரூபா போடப்பட்டுள்ளது என அன்றே நான் சுட்டிக்காட்டி இருந்தேன். அது உண்மையாகியுள்ளது. அரசாங்கமும், கம்பனிகளும் இணைந்து நாடகத்தை அரங்கேற்றியுள்ளன.

எமது மக்களை எந்நாளும் ஏமாற்ற முடியாது. எமது ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். பெருந்தோட்ட தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள். சஜித் பிரேமதாச இது தொடர்பில் எம்மிடம் உறுதியளித்துள்ளார்.

மக்களை ஏமாற்றும் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். மக்கள் எமது பக்கமே உள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணி மக்களுக்கு துரோகம் இழைக்காது. எமது ஆட்சியில் காணி உரிமையும் நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்றார்.

 

(க.கிஷாந்தன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here