ராகம பொலிஸ் பிரிவில் வசிக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் கடந்த 4 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
ராகம படுவத்த பிரதேசத்தில் வசிக்கும் நண்பர்களான பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர்.
நாரங்கொடபலுவ ராகமவில் வசிக்கும் 11 வயதுடைய ஆர்.எம். சேத் மணித்து மற்றும் 13 வயதுடைய எஸ்.ஏ.இ. ஓஷதா இந்திரா என்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இருவரும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளதாக ஒரு மாணவனின் தாயும் மற்றைய மாணவனின் பாட்டியும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நோர்வூட் பிரதேசத்தில் இருந்து காணாமல் போன பாடசாலை மாணவர்கள் நால்வரும் ராகமையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் வென்ஜர் பகுதியைச் சேர்ந்த சென் ஜோன் டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் நான்கு மாணவர்கள் காணாமல் போன நிலையில், காணாமல் போன மாணவர்களில் ஒருவரான அனூஜனின் தந்தையான ராஜ் குமார் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் தேடுதல் பணியில் ஈடுபட்ட பொலிஸார் மாணவர்களை கைது செய்து அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், காணாமல் போன மாணவர்கள் நால்வரும் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் எனவும் அவர்கள் ராகம பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக புகையிரதத்தில் சென்றுள்ளதாகவும் மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. a