-தொழிலாளர்களின் குடியிருப்புகள் அகற்றப்படுவதற்கு எதிராக மலையகப் பிரதிநிதிகள் குரல் கொடுக்கவில்லை

0
104

அத்துமீறி கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு எதிராக வழக்கு தொடரத் தேவையில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் காலத்தில் கம்பனிகளுக்கு அறிவிருதல் விடுக்கப்பட்டு சுற்றுநிருபங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும், தோட்டத் தொழிலாளர்கள் தமது உழைப்பின் மூலம் கட்டியுள்ள குடியிருப்புகள் பல உடைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக மலையகப் பிரதிநிதிகள் எவரும் பாராளுமன்றத்தில் எவரும் குரல் கொடுக்கவில்லை. நாம் பாராளுமன்றம் செல்லும் போது இது தொடர்பாகவும், காணி வீடுகள் சம்பந்தமாகவும் வலியுறுத்துவோம் என மலையக ஜனநாயக முன்னணியின் தலைமைக்குழு உறுப்பினர் சட்டத்தரணி எஸ். விஜயகுமார் தெரிவித்தார்.

மலையக ஜனநாயக முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேச்சை குழு இல. 11 இல் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக ஊடக சந்திப்பு சனிக்கிழமை (12) அட்டன் டைன் அன் ரெஸ்ட் விருந்தகத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். முதன்மை வேட்பாளர் எஸ். ஹெரோசன்குமார் உட்பட வேட்பாளர்கள் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சட்டத்துக்கு முரணாக 30 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவற்றை அகற்றுவதற்காக 2000 க்கும் அதிகமான கோப்புகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல் அறியும் சட்ட மூலத்தின் ஊடாக தெரிய வந்துள்ளது. 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னரே இவ்வாறு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எனினும், 1996 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையார் காலப் பகுதியில் அவற்றை அகற்றத் தேயில்லை என்று தோட்டக் கம்பனிகளுக்கு சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தொழிலாளர்களால் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் உடைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராகவும் காணி, வீடுகள் சம்பந்தமாகவும் நாம் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுப்போம்.

மேலும், பெருந்தோட்ட மக்கள் அரசியல்வாதிகளால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். அண்மையில் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபா கிடைத்தது தமக்குக் கிடைத்த வெற்றி என்று பிரசாரம் செய்தார்கள். இவ்வாறு வழங்க முடியும் என்று கம்பனிகள் சார்பில் ரொஷான் இராஜதுரை தான் கூறியிருந்தார். இதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அத்தோடு சம்பள நிர்ணய சபையின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க 14 நாட்கள் அவகாசம் தரப்பட்டிருந்தது. அதற்குப் பிறகுதான் கருத்து கூற முடியும். ஆனால், கைச்சாத்திட்ட தினத்திலேயே சம்பளம் கிடைத்து விட்டதாக வெற்றி விழா கொண்டாடினார்கள். இத்தகைய பொய், புரட்டுகளை அம்பலப்படுத்தி எமது மக்களுக்குத் தெளிவூட்டுவதே எமது நோக்கமாகும்.

மலையகத்தில் அடிக்கடி கட்சி தாவுகின்றவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எமது கொள்கைகளை ஆதரித்து மலையகத்தில் மட்டுமல்லாது, வெளியிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகின்றது. இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து சட்டத்தரணிகள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் எமது சுயேச்சைக் குழுவின் “தாயக்கட்டை” சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள் அவர்களை வெற்றி பெறச் செய்வதற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

 

க.கிஷாந்தன், மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here