பஸ் கட்டணம் அதிகரிப்பு!

0
68

எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எதனையும் எடுக்காமையின் காரணமாக, ஜூலை மாதம் இடம்பெறவுள்ள கட்டண திருத்தத்தின் போது பஸ் கட்டணம் மேலும் அதிகரிக்கப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

வாகன உதிரிப்பாகங்களுக்கான விலை அதிகரித்துள்ளமையின் காரணமாக, தாம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜூலை மாதமாகும்போது நிச்சயமாக பஸ் கட்டணத்தில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். அதனை என்னால் உறுதியாக கூற முடியும். எரிபொருள் விலை குறைந்தால் அதற்கான நிவாரணத்தை வழங்க முடியும்.

ஆனால், எரிபொருள் விலை குறைப்பு இடம் பெறவில்லை. எரிபொருள் மாத்திரமல்லாமல் ஏனைய செலவுகளையும் குறைக்க வேண்டியது அவசியமாகும். ஏனைய செலவுகளினால் பாரதூரமாக சிக்கல்களை சந்தித்துள்ளோம். வாகன உதிரிப்பாகங்களுக்கான விலையும் குறைக்கப்படவில்லை. பெரும் நெருக்கடியிலேயே இருக்கிறோம்.

ஜூலை மாதமாகும்போது பஸ் கட்டணம் வரையறையின்றி அதிகரிக்கப்படும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம். பஸ் ஒன்றின் விலை ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப ஏனைய சகல செலவுகளும் அதிகரித்துள்ளன. எனவே, ஜூலை மாதம் இடம்பெறவுள்ள பஸ் கட்டண திருத்தத்தின் போது இந்த செலவுகள் குறித்து கவனம் செலுத்த நேரிடும். நிச்சயமாக ஜூலை மாதத்தில் பஸ் கட்டண திருத்தத்தைமேற்கொள்ள நேரிடும்.

எரிபொருள் விலையை குறைப்பார்கள் என்றே எதிர்பார்த்தோம். பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டுமெனில் எரிபொருளுக்கான விலை 30 ரூபாவால் குறைக்க வேண்டும். 3 ரூபா நட்டத்திலேயே நாங்கள் போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறோம். எனவே எரிபொருள் விலை 4 சதவீதத்தால் குறைக்கப்பட்டால் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றும் சுட்டிக்காட்டினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here