வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பெறப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு, தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
வறிய குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.
“போலி குறுஞ்செய்திகள் குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அதிக அளவில் முறைப்பாடுகள் வருகின்றன. ஏழைக் குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் உதவித் தொகையை ஜனாதிபதி வழங்குவார் என்ற செய்தி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த இணைப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
இந்த இணைப்புகளைத் தடுக்க நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவை போலி இணைப்புகள். இவற்றுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்கினால், உங்கள் வங்கிக் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத அணுகல், மின்னஞ்சல் கணக்குகளுக்கான மூன்றாம் நபர் அணுகல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக்கொள்கிறது” என்றார்.