மலையக மக்களால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் ஜீவன் தொண்டமான். அவரை தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த அமைச்சர் சந்திரசேகர் மலையக மக்கள் பற்றி பேச வேண்டாம் என்று கூறுவதற்கு எவ்வித அருகதையுமற்றவர். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார கோரமுகத்தின் வெளிப்பாடு. இது எதிர்பார்த்த ஒன்றுதான் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த 80 வருடங்களுக்கு மேலாக மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது. இலங்கை வரலாற்றில் இனவாதிகளாலும் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற பெயரில் மலையக மக்களை இழிவு படுத்தியவர்களாலும், தேயிலை தொழிற்சாலைகளை எரித்தவர்களாலும், தொழிலாளர்களின் சம்பளத்தை கொள்ளை யடித்தவர்களாளும், தொழிற்சங்க தலைவர்களை கொலை செய்தவர்களாலும், வாக்குரிமையை பறித்தவர்களாலும் வஞ்சிக்கப்பட்ட இனமாக மலையகத் தமிழினம் மிகவும் கரடு முரடான பாதையை இந்த நாட்டில் கலந்து வந்திருக்கிறது.
மலையக மக்களுக்கு எதிரான எல்லா சவால்களையும் எதிர்கொண்டு எல்லா சக்திகளையும் முறியடித்து இந்த மக்களுக்கு தலைமை கொடுத்து, தலை நிமிர வைத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரை பார்த்து மலையக மக்கள் குறித்து பேச வேண்டாம் என்று சொல்வதற்கு அமைச்சர் சந்திரசேகர் யார்?
இலங்கை வாழ்கின்ற இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு வாக்குரிமை இருந்த போதும், வாக்குரிமை இல்லாது ஒழிக்கப்பட்ட போதும், பாராளுமன்ற உறுப்புரிமை இருந்த போதும் அது இல்லாத போதும் அம்மக்கள் மத்தியில் நிலையாக நின்று அவர்களுக்கு குரல் கொடுப்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொள்கையாகும்.
தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்தது அரசாங்கத்தை அமைக்க வைத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மீது விரல் நீட்டுவதற்கல்ல. மாறாக எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். வெறும் வாய் சவாடல் மூலம் காலத்தை வீணடிக்காமல் மலையக மக்களின் வீடு , காணி, சம்பளம், தொழில் போன்றவற்றுக்கு தீர்வை முன் வையுங்கள்.
கடந்த 80 வருடங்களில் மலையக சமூகம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து பல்வேறு பரிணாமங்களில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அர்ப்பணிப்பும் செயற்பாடுமே காரணமாகும்.
மலையக மக்களின் வளர்ச்சியின் ஒவ்வொரு அடியிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பக்கபலமாக இருந்து வந்திருக்கிறது. தொடர்ந்தும் இருக்கும். நாம் பொய்ப்பித்தலாட்டம் செய்து மக்கள் மனங்களில் தற்காலிகமாக இடம் பிடித்தவர்கள் அல்ல. மாறாக மக்களுக்கு சேவை செய்து அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கு துணிவிருந்தால் பாராளுமன்றத்தில் கூறியதை ஹட்டன் பிரதேசத்திற்கு வந்து ஒரு தோட்டத்தில் கூறி பார்க்கட்டும். அவருக்கு மலையக மக்கள் சரியான பாடத்தை புகட்டி அனுப்புவார்கள்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை இழுத்தடிக்காமல் உடனடியாக நடத்த வேண்டும். தேர்தலில் நாம் பேச வேண்டியதில்லை பதிலாக மக்களே பேசுவார்கள். எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தல் தேசிய மக்கள் சக்தியின் தோல்வியை ஆரம்பித்து வைக்கும். அமைச்சர் சந்திரசேகரும் அவருடைய தேசிய மக்கள் சக்தியினருக்கும் தைரியம் இருந்தால் நுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் ஒரு சபையாவது பிடித்துக் காட்டிவிட்டு சவடால் விடட்டும்.
அமைச்சர் சந்திரசேகரின் உரை மூலம் மக்களுக்கு பொய்களைக் கூறி அதன் மூலம் ஆட்சியைப் பெற்றுக் கொண்ட தேசிய மக்கள் சக்தி நாட்டை சர்வாதிகார முறையில் ஆட்சி செய்ய ஆரம்பிக்கின்றதா? என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது. என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.