திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி!

0
12

தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை அந்தோணியார் தேவாலய திருவிழாவில் நேற்று சனிக்கிழமை அலங்கார பணிகளை மேற்கொண்டபோது உயரமான இரும்பு ஏணி உயரழுத்த மின்கம்பியில் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காபட்டணம் பகுதியில் இனயம் புத்தன்துறை என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்குள்ள அந்தோணியார் தேவாலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர் செல்லும் பகுதிகளில் தேர் செல்ல தடையாக உள்ள பொருள்களை அகற்றும் பணியும், அலங்காரம் மேற்கொள்ளும் பணியும் இன்று நடைபெற்றது.

இதற்காக, சக்கரங்களுடன் கூடிய உருட்டி செல்லும் வகையில் அமைந்துள்ள 30 அடிக்கு மேல் உயரம் கொண்ட இரும்பு ஏணியை பயன்படுத்தி, பக்தர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை ஏணியை தேவாலயம் முன்பிருந்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றபோது அங்கு உயரழுத்த மின்கம்பில் ஏணி உரசியது. இதில் மின்சாரம் ஏணியில் பாய்ந்து ஏணியை உருட்டி சென்ற 4 பேர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இதில் 4 பேரும் ஏணியை விட முடியாததால் உடல் கருகினர். அவர்களின் உடல் மீது தீப்பொறி பற்றியதால் அங்கு திரண்டிருந்த பக்தர்கள், பெண்கள் கதறி அழுதனர். பொதுமக்கள் கூடி அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மின்சாரம் பாய்ந்ததால் யாரும் பக்கத்தில் நெருங்க முடியவில்லை. ஏணியில் சிக்கிய 4 பேர் மீதும் தீப்பொறி பற்றி எரிந்ததால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இதனால் 4 பேரும் உடல் கருகி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here