தேசபந்து உட்பட்ட மூவர் தொடர்ந்தும் தலைமறைவு!

0
11

கனேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண்ணை கைதுசெய்வதற்காக கடந்த 19ஆம் திகதியிலிருந்து கடந்த 21 நாட்களாக பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்து தரும் நபர்களுக்கு 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதாக பொலிஸார் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்ததுடன் தற்போது அந்தத் தொகை 12 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு வீதி, ஜயமாவத்தை, கட்டுவெல்லேகம என்ற முகவரியைச் சேர்ந்த 25 வயதான பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி என்பவரே இவ்வாறு பொலிஸாரால் தேடப்பட்டு வருவதுடன், அவர் 995892480V என்ற இலக்கம் கொண்ட தேசிய அடையாள அட்டைக்கு உரிமையுடையவர் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் 071-8591727 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளருக்கோ அல்லது 071-8591735 என்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரிக்கோ தகவல் வழங்க முடியும்.

கனேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு ரிவோல்வரை எடுத்துவந்து கொடுத்ததாக இவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை தேடிக் கண்டுபிடிப்பதற்காக பல்வேறு பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், சந்தேகநபரின் புகைப்படமும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தறை நீதிமன்றத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட உத்தரவுக்கமைய கடந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்வதற்கு 12 நாட்களாக பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்வதற்காக 06 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாத்தறை, பெலேன பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசபந்து தென்னக்கோனுக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் களனி, கிரிபத்கொட பிரதேசத்தில் காணியொன்றுக்கு போலி ஆவணத்தை தயாரித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைதுசெய்ய கடந்த 07ஆம் திகதியிலிருந்து ஐந்து நாட்களாக தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here