குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகள் ஆகியோரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திவிட்டு , தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பதுளை மாவட்டம் மடுல்சீமை ரோபேரி தோட்டத்தில் இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மடுல்சீமை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பிட்டமாறுவ- ரோபேரி பகுதியில் வசிக்கும் குறித்த நபர் நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் இருவரையும் கூரிய ஆயுதத்தால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் சத்தம் கேட்டு அங்கு வந்த அயலவர்கள் படுகாயமடைந்த பெண் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரையும் மீட்டு முச்சக்கரவண்டியில் ஏற்றிச்சென்று ரோபேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
படுகாயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சந்தேகநபரான குறித்த குடும்பஸ்தர் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளார். அயலவர்கள் அவரை தேடிச்சென்ற போது பக்கத்துவீட்டுகாரர் ஒருவரின் மரக்கறி தோட்டத்தில் உள்ள புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
மடுல்சீமை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ராமு தனராஜா