இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, கடந்த 2014 ஆம் ஆண்டு ஹசின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கும் இடையிலான கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து கோரி பிரிந்தனர்.
அப்போது முகமது ஷமி தனது மனைவிக்கு ரூ. 50,000 மற்றும் மகளுக்கு ரூ. 80,000 மாதாந்திர ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு இந்த மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜஹான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
ஹசின் ஜஹான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அஜோய் குமார் முகர்ஜி தலைமையிலான அமர்வு, முகமது ஷமி தன்னுடைய முன்னாள் மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.1.5 லட்சமும், மகளுக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது.
ஷமியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு, ஹசின் ஜஹான் கொல்கத்தா அணியின் மாடலாகவும், சியர்லீடராகவும் பணியாற்றிவந்தார். இருவரும் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்தத் தம்பதியினருக்கு 2015 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
2018 ஆம் ஆண்டு வரதட்சணை, துன்புறுத்தல் மற்றும் மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஹசின் ஜஹான் சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு காரணமாக, முகமது ஷமியில் மத்திய ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.