இஸ்ரேல் – ஈரான் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் இரு மாதங்களுக்கு போதிய எரிபொருள் கையிருப்பு உள்ளதாக கூறிய அரசாங்கம் தற்போது எதற்காக எரிபொருள் விலையில் அதிகரிப்பை செய்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வினவினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த அவர்,
அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. எதற்காக இந்த அதிகரிப்பு செய்யப்பட்டது? எரிபொருள் விலைச்சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில் தற்போதைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிரான பல விடயங்களை கூறினர்.
உலக சந்தையின் எரிபொருள் விலை மாற்றங்களின் நம்மை தீமைகளை பொறுத்து உள்நாட்டிலும் விலையை தீர்மானிக்கவே விலைச்சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்று துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கும் மக்களுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருளின் விலைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவௌி காணப்படுகிறது.
கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் சட்டை பைக்கும் பணம் செல்கிறது என்று தற்போதைய ஆளும் கட்சியினர் குற்றஞ்சாட்டினர். தற்போது எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எந்தவித நியானமாக காரணங்களும் இருக்கின்றனவா?
உலக வங்கியிலும் எண்ணெய் விலை உயர்வடையவில்லை. மாறாக குறைவடைந்திருக்கிறது. ஈரான் – இஸ்ரேல் யுத்தம் எண்ணெய் சந்தையை எதிர்பார்த்த அளவில் பாதிக்கவில்லை. சொற்ப அளவிலான மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்தியிருந்தது.
மேற்படி யுத்தம் ஆரம்பித்த போது எந்த காரணத்துக்காகவும் எண்ணெய் விலை உயராது என அமைச்சர்கள் கூறினர். 2 மாதங்களுக்கு முன்பாக கொண்டுவரப்பட்ட எண்ணெய்க்கு எதற்காக விலை அதிகரிக்கப்பட்டது? என வினவினார்,
மறுமுனையில், தேசிய மக்கள் சக்தியின் வசமாக சில உள்ளூராட்சி மன்றங்களை கைபற்றிக்கொள்வதற்கான அமைச்சர்களும், எம்.பிக்களும். நேரடியாக சபைகளுக்குள் சென்று அமர்ந்து அழுத்தங்களை பிரயோகிப்பதை காண முடிந்தது.
சில சமயங்களில் ஜனாதிபதியும் தனது உரையின் ஊடாக எதிர்கட்சிக்கு வாக்களிப்பதை பலவீனப்படுத்தும் வகையிலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்,
ஆனால் அதற்கு மத்தியிலும் பொது எதிர்க்கட்சியானால் 94 சபைகளை வெற்றிக்கொள்ள முடிந்தது. எஞ்சியுள்ள 11 சபைகளிலும் பெரும்பாலான சபைகளை வெற்றிகொள்ளும் இயலுமை கிட்டுமென நம்புகிறோம்.
அதனால் பொது எதிர்கட்சியாக நம்பிக்கை மற்றும் இணக்கப்பாடுகளுக்கு வந்தவர்களுக்கு நன்றி கூறுகிறோம்., இது அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்படுவதற்கான ஆரம்பமாகவும் அமையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.