விராட் கோலி சொன்ன சுவாரஸ்ய தகவல்!

0
16

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த மே மாதம் சமூக ஊடகங்களில் ஒரு சுருக்கமான குறிப்பை வெளியிட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.

எனினும், அவர் தனது ஓய்வுக்கான காரணத்தை வெளியிடாமல் இருந்ததால் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இந்நிலையில், தற்போது தனது ஓய்வு குறித்து முதல் முறையாக பேசிய விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்மால் முடிந்த அனைத்தையும் இந்தியாவுக்காக கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது தொண்டு நிறுவனமான YouWeCan அறக்கட்டளைக்காக ஒரு பெரிய விருந்தை நடத்தினார், இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் அழைக்கப்பட்டனர்.

அவர்களில் கோலியும் ஒருவர், இந்நிகழ்வில் தனது ஓய்வு குறித்த மௌனத்தை விராட் கலைத்தார். இதன்போது பேசிய அவர்,

என்னுடைய தாடியை இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் வர்ணம் செய்தேன். உங்களுடைய தாடியை ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு ஒரு முறை வர்ணம் பூசினால் உங்கள் (விடை பெறும்) நேரம் வந்து விட்டது என்பது உங்களுக்குத் தெரியும்.

இந்த முடிவு எளிதானது கிடையாது என்றாலும் சரியானதாக உணர்கிறேன்.

என்னால் முடிந்த அனைத்தையும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கொடுத்து விட்டேன். அதுவும் நான் நம்பியதை விட எனக்கு அதிகமாகவே திரும்பிக் கொடுத்துள்ளது. அதனால் மிகுந்த நன்றியுணர்வுடன் இந்த விளையாட்டிலிருந்து வெளியேறினேன்” என்றார்.

36 வயதான விராட் கோலி 210 இன்னிங்ஸ்களில் (123 டெஸ்ட்) 46.85 சராசரியாக 9230 ஓட்டங்கள் குவித்து ஒரு அற்புதமான டெஸ்ட் வாழ்க்கையைப் பெற்றுள்ளார். அவர் 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்களுடன் இந்த ஓட்டங்களை குவித்துள்ளார்.

மேலும், அவர் 68 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கினார், அவற்றில் 40 போட்டிகளில் வெற்றி பெற்றார், இது அவரை இந்த வடிவ வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இந்திய தலைவராக மாற்றியுள்ளது. அவரது 58.82 வெற்றி சதவீதம் ஆகும்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்ற பின்னர், கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து கடந்த மே மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

எவ்வாறாயினும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக விராட் கோலி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here