சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதால் தேசிய பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் அது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார, துறைமுக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் துறைமுகப் பிரதி அமைச்சர் ஆகியோரையே விசாரிக்க வேண்டும். அதை செய்யாது எம்மை விசாரிக்காதீர்கள் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தையும் அரசாங்கம் தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்துகின்றது எனவும் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) புதன்கிழமை சிறப்புரிமை தொடர்பில் கேள்வியெழுப்பியபோதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கொள்கலன்கள் சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்ட விடயங்களுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டேன். எதிர்க்கட்சி எம்.பிக்களான காவிந்த ஜயவர்தன, சித்ரால் பெர்னாண்டோ, முஜிபுர் ரஹ்மான், அர்ச்சுனா ஆகியோரும் இவ்விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
ஊடக சந்திப்பில் குறிப்பிடும் விடயங்களை குற்றவியல் குற்றமாக கருதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைகளை மேற்கொள்வதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுரிமை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த அரச தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ,
ஊடக சந்திப்பை நடத்தியதற்காக குற்றப்பு லனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கவில்லை. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்ட விடயத்துக்காகவே இவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றார்.
இதனையடுத்து மீண்டும் சபையில் எழுந்த தயாசிறி ஜயசேகர எம்.பி.பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கொள்கலன்கள் , தொடர்பில் அரச தரப்பின் உறுப்பினர்கள் பல விடயங்களை குறிப்பிட்டார்கள். இவ்விடயத்தில் தேசிய பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, துறைமுக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் துறைமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆகியோரையே விசாரிக்க வேண்டும். அதனை விடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தை அரசியல் மயப்படுத்தி எம்மை விசாரித்து அச்சுறுத்தாதீர்கள் என்றார்.