‘பெண்களை வலுவூட்டல் பற்றிய மாவட்ட ரீதியான முன்னோடி வேலைத்திட்டம்’ தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு 2025 ஜூலை 08 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த செயலமர்வு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் இடம்பெற்றதுடன், இதில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் (வைத்தியர்) நாமல் சுதர்சனவும் கலந்துகொண்டார்.
தற்போதைய அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் ‘சமூக சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பெண் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் இலங்கை மகளிர் பணியகத்தின் பணிப்பாளர் சஜீவனி பெரேரா இச்செயலமர்வில் விடயங்களை முன்வைத்தார்.
அதற்கமைய, பெண்களை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வலுவூட்டுவதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் செயலமர்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
இலங்கையில் 25 மாவட்டங்களிலும் எந்தவகையானதொரு தொழில் முயற்சியில் ஈடுபடும் 500 பெண்களின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல் மற்றும் வசதிகளை செய்துகொடுப்பதன் மூலம் வருமானத்தை உயர்த்துவதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை அணுகலுக்கான சந்தர்ப்பத்தை உருவாக்குதல் போன்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் செயலமர்வில் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் மற்றும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளர் எம். ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.