மரபுகள், பண்பாடுகள் மற்றும் கலைகளை பேணுவதில் புறக்கணிப்பு ஏற்பட்டால், அடுத்த தலைமுறைக்கு மூலதனமான அடையாளங்களைக் கையளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
“புதுமைகளுக்குள் நுழைவது அவசியம் என்றாலும், மரபு, பண்பாடு, கலை, விளையாட்டு ஆகியவற்றின் தனித்துவம் தளராமல் பாதுகாக்கப்பட வேண்டும். இவையே இனத்தின் அடையாளங்கள். அதனால்தான் அவற்றை வளர்த்து, அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறு அவர், தமிழர்களின் மரபு பண்டிகையான ‘ஆடிப்பிறப்பு’ நாளையொட்டி, பச்சிலைப்பள்ளி இயக்கச்சி கரிகாலன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கபடிப் போட்டி மற்றும் ஆடிக்கூழ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தலைவர் சுப்பிரமணியம் சுரேன், உபதவிசாளர் சிவகுரு செல்வராசா, சபை உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.