கறுப்பு ஜூலை வரலாற்றை மறைக்க முயற்சிக்காது அதனை சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (23) நடைபெற்ற கம்பனிகள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழர்கள் இன்றைய நாளை கறுப்பு ஜூலையாக அனுஷ்டிக்கின்றனர். 1983இல் வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, கொழும்பில் பலர் கொல்லப்பட்டனர்.
இராணுவ மற்றும் பொலிஸாரின் தலைமையில் அரச உதவிப் பின்னணியில் தமிழ்க் குடும்பங்கள் உயிருடன் எரிக்கப்பட்டன. அது மறக்க முடியாத சம்பவங்கள். சிங்களவர்களிடையே இருந்த நல்லவர்கள் தமிழர்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்தனர். அந்தச் சம்பவங்கள் இடம்பெற்ற நாளையே தமிழர்கள் அனுஷ்டிக்கின்றனர்.
எனினும், இன்னும் இதனைச் சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான நாளாக அறிவிக்க முடியவில்லை. அதேபோன்று, இதுவரையில் இன்னும் எந்த அரசும் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக்கோரவும் இல்லை.
தற்போதைய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இளைஞர்கள் குழு தெற்கிலிருந்து இந்த நாளை நினைவுகூர்ந்து வடக்குக்குச் செல்கின்றனர். ஆனால், முற்றிலும் அனுஷ்டிப்பு நாளை மாற்றியமைக்கும் வகையில் இது அமைகின்றது.
ஜே.வி.பியும் இதில் குற்றவாளியே. கறுப்பு ஜூலையை வரலாற்றிலிருந்து மறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அதனை மறைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் அங்கு படைகளால் விவசாயம் முன்னெடுக்கபப்ட வருகின்மையையும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.